Sunday, August 18, 2013

ஷைத்தானிடமிருந்து பாதுகாப்பு

ஷைத்தான் நம்முடைய பகிரங்க விரோதி ஆவான். ஆதிமனிதர் காலத்திலிருந்து பகைமை தொடர்கின்றது. திக்ருல்லாஹ் – இறைவனை நினைவுகூறும் இடங்களில் ஷைத்தானின் சதிவலைகள் பயனற்றுப் போகின்றன. கழிப்பிடங்களில் நாம் திக்ரு செய்வதில்லை. அங்கே அவனுடைய ஆதிக்கம் அதிகமாக உள்ளது. எனவே உள்ளே செல்லும் போது நாம் கெட்ட ஜின்களை விட்டு பாதுகாப்பு தேடிக் கொள்கின்றோம்.ஷைத்தான் வழிகேட்டுக்கு வழி வகுக்கும் செயல்களையே தூண்டுகின்றான்.

மானக்கேடானவை மற்றம் தீயவற்றைச் செய்யுமாறே ஷைத்தான் ஏவுவான். (நூர் – 21)

இறைநம்பிக்கையாளன் தொழுகையின் மூலமாக இறைவனுடனான ஒப்பந்தத்தை புதுப்பித்துக் கொள்கின்றான். இறைநினைவு அவன் மனதில் நீங்கா இடம் பிடிக்கின்றது. இறைநினைவு எந்த நிமிடமும் அவனை விட்டு நீங்குவதே இல்லை. எனவே, அவனைக் காக்கும் கேடயமாக, இறை நினைவினை அவனுக்கு அளிக்கும் 'தொழுகை' மாறிவிடுகின்றது.

நிச்சயமாக தொழுகை மானக்கேடான மற்றும் தீயசெயல்களை தடுக்கின்றது. (அன்கபூத் – 45)

இவ்வசனத்தை விளக்குகையில் அல்லாமா இப்னு கஸீர் ரஹ்மதுல்லாஹி அலைஹி ஒரு கருத்தை அறிவிக்கின்றார். அதுமவ்கூஃப்ஹதீஸ் ஆகும். அதாவது நபித்தோழர்களோடு நின்றுவிடும் அறிவிப்பு. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத், அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ், ஹஸன் ஆகியோர்களோடு நின்று விடுகின்றது. அதாவது -தடுக்கப்பட்ட தீய செயல்களை விட்டும், மானக்கேடான ஆபாசமான காரியங்களை விட்டும் யாரை அவருடைய தொழுகை தடுக்கவில்லையோ, அது தொழுகையே அல்ல! (அல்லது அவர் தொழுகவே இல்லை)

  இஹ்ஸானுஸ் சலாத்  
 
நாம் ஏற்கனவே இஹ்ஸானுல் ஒழுவைப் பற்றி பார்த்துள்ளோம். அதே போல இஹ்ஸானுஸ் சலாத்தும் உள்ளது. ஒவ்வொரு இபாதாவிலும் இஹ்ஸான் உள்ளது (உதாரணம் – இஹ்ஸானுத் துபுஹ், இஹ்சானுல் ஜிஹாத்) இஹ்ஸானுஸ் சலாத் என்றால் என்ன?புகழ் பெற்ற ஹதீஸு ஜிப்ரீல் – ஐக் காண்போம். பிறகு அவர் 'இஹ்ஸான் என்றால் என்ன?' என்று கேட்டார். அண்ணலெம் பெருமானார் பதில் கூறினார்கள், 'நீ அல்லாஹ்வைப் பார்த்துக் கொண்டிருக்கிறாய் என்ற உணர்வோடு அவனை வணங்க வேண்டும். அவ்வாறு வணங்க இயலவில்லை என்றால் அவன் உன்னை பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற உணர்வுடனாவது வணங்க வேண்டும்ஸஸஸ..' (சஹீஹுல்புஃகாரி)

நீண்ட ஹதீஸின் ஒரு பகுதி இது! அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இஹ்ஸான் என்பதற்கு தெளிவானதொரு விளக்கத்தை அளித்துள்ளார்கள். அதனடிப்படையில் ஒரு மனிதன் இருவித நிலைகளில் தொழலாம், தொழ வேண்டும்!

(1) அல்லாஹ்வுக்கு முன்னால் நாம் நின்று கொண்டு, அவனைப் பார்த்துக் கொண்டிருந்தால் எத்தகைய எண்ணங்கள், உணர்ச்சிகள் நம் உள்ளத்தில் மேலெழும்புமோ அவ்வுணர்வுகளோடு தொழுக வேண்டும்.
(2) அந்த அளவுக்கு நாம் இல்லை என்றால், அத்தகைய உணர்வுகளை நம்மால் அடைய இயலவில்லை என்றால், அவன் நம்மைப் பார்த்துக் கொண்டே இருக்கிறான். நாம் பார்க்காவிட்டாலும் அவன் நம்மை கண்காணித்துக் கொண்டே உள்ளான் என்ற உணர்வோடு தொழுக வேண்டும்.

இந்த இருவித நிலைகளில் ஏதேனுமொரு நிலையில் நின்று தொழுதால் தான் அது இஹ்ஸானஸ் சலாத் ஆக இருக்கும். இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படும். இவ்விரு நிலைகளைத் தவிர்த்து மூன்றாவதாக ஒரு நிலை கிடையாது.

நாம் ஒரு கடையில் வேலை செய்வதாக நினைத்துக் கொள்வோம். முதலாளிக்கு முன்னால் நின்று கொண்டுள்ளோம். நாம் முதலாளியின் பார்வையிலும் அவர் நம்முடைய பார்வையிலும் இருக்கும் போது நம்முடைய பொறுப்பு உணர்வு எந்த அளவு நன்றாக இருக்கும். வீண் காரியங்கள் செய்ய மாட்டோம். சக ஊழியர்களோடு அரட்டையில் ஈடுபட மாட்டோம். வாடிக்கையாளர்களைக் கவனிக்காமல் பொழுதைப் போக்க மாட்டோம். மாறாக, கடமையில் கண்ணுங்கருத்துமாக இருப்போம். இல்லையா?

இதே கடை, ஆனால் முதலாளி முன்னால் இல்லை. அவர் தன்னுடைய அறைக்கு சென்றுவிட்டார். நம்மால் அவரைப் பார்க்க இயலாது. ஆனால் அவர் குளிர்கண்ணாடிகளின் வழியாக நம்மைக் கண்காணித்துக் கொண்டே இருக்கும் போது, நாம் வெட்டிவேலைகளில், சேட்டைகளில் ஈடுபடுவோமா? இல்லை, கவனமாக இருப்போமா? நாம் ஒரு சபையில் கலந்து கொள்ள செல்கின்றோம். மேன்மனிதர்கள், உயர் பெருமக்கள் அச்சபையில் அமர்ந்துள்ளார்கள். சபை மரியாதையோடு தன்னடக்கத்தோடு நடந்து கொள்கின்றோம். அதே அவைக்கு பார்வையற்ற ஒரு மனிதன் வருகிறார். அவரால் யாரையும் பார்க்க முடியாது. தன்னை விட அறிலிலும், அந்தஸ்திலும் பெரிய சான்றோர் பலர் அமர்ந்துள்ளார்கள் என்ற நினைப்போடு கண்ணியமாகவும் அடக்கமாகவும் அவர் நடந்து கொள்வாரா? இல்லை, தான்தான் யாரையும் பார்க்க இயலாதே என்ற எண்ணத்தில் கௌரவக் குறைவான வேலைகளை – கூச்சல் இடுவது, உடைகளை தாறுமாறாக ஆக்கிக் கொள்வது போன்ற செயல்களை செய்வாரா?

ஆக, சகோதர, சகோதரிகளே! இவ்விரண்டு நிலைகள் தாம் தொழுகைக்கான நிலைகள். நம்முடைய கொழுகை உண்மையிலேயே தொழுகையாக இருக்க வேண்டுமானால் நாம் இவற்றில் ஒன்றை கைக்கொண்டிருக்க வேண்டும். அப்போது தான் அது தொழுகையாக இருக்கும். தொழுகையின் தன்மைகளைப் பெற்றிருக்கும். இறைவனால் தொழுகையாக அங்கீகரிக்கப்படும், ஏற்றுக்கொள்ளப்படும். தொழுகை, தொழுகையாக இருந்தால் தான் அது தீமைகளை விட்டு, தடுக்கப்பட்ட செயல்களை விட்டு ஆபாசமான காரியங்களை விட்டு நம்மைத் தடுக்கும். கோழி தானியங்களைக் கொத்துவதைப் போல அவசர அவசரமாக கொத்தி எறிந்து விட்டு வந்தால் அது தொழுகையும் அல்ல. அது தன் வேலையையும் செய்யாதுஸ அவ்வாறு தொழுபவனை தொழுகைத் திருடன் என்று ஹதீஸ் வர்ணிக்கிறது.

தொழுகையை உடல், உயிர் என்று நாம் வகைப்படுத்தலாம். உயிர் இல்லாத உடல் பயனற்றது. ஒருவன் மிகவும் அழகாக கச்சிதமான உறுப்புகளைக் கொண்டவனாக இருக்கின்றான். ஆனால் அவன் உடம்பில் உயிர் இல்லை என்றால், அவன் என்று அதை நாம் சொல்லமாட்டோம். அது பிணம்! அதே சமயம் ஒருவன் கைகால் அற்றவனாக, அல்லது உறுப்புகள் சிதைந்த நிலையில் அல்லது ஹெலன் கெல்லரைப் போல புலனுணர்வுகள் அற்ற நிலையில் இருந்தாலும் நாம் அவனை மனிதன் என்றே கருதுவோம்.மதிப்போம். உயிரோட்டம் இல்லாத தொழுகை வடிவழகில் முழுமையானதாக இருந்தாலும்அண்ணலாரை அப்படியே பின்பற்றினாலும் அது தொழுகையாக ஆகிவிடாது. பிணத்திற்கு எதற்கு அழகும் சௌந்தர்யமும்?

  ஹிஃப்ழுல் குர்ஆன்  

அல்லாஹ்வுடைய கலாமாகிய வான்மறை குர்ஆனில் நம்மால் இயன்ற அளவு அதிகமதிகம் மனனம் செய்ய முயற்சிக்க வேண்டும். சகோதர, சகோதரிகளே! நம்மில் பலரும் இஸ்லாத்தை சரியாக விளங்கிக் கொள்ளும் முன் சினிமாவும் TVயும் பார்த்துக் கொண்டிருந்தோம். இல்லையா? அப்போதெல்லாம் கேட்ட எத்தனையோ படப்பாடல்கள், விளம்பரப்பாடல்கள் இன்றும் நினைவில் பசுமையாக உள்ளன. எப்போதோ கேட்ட பாடல்களுக்கும், தேவையற்ற செய்திகளுக்கும் நாம், நம்முடைய நினைவில் இடம் ஒதுகிகியுள்ள போது, ஏன் குர்ஆனுக்கொன்றும் ஓரிடத்தை ஒதுக்கக் கூடாது? மனித மூளை அற்புதமான திறன் கொண்டது. நாம் இப்போது சினிமாவே பார்ப்பதில்லை என்றாலும் எப்போதோ கேட்ட பாடல்கள் இன்றும் அழியாமல் நினைவில் வைத்துக் கொள்ளும் திறன் படைத்தது நம்முடைய மூளை! எனவே நாம் குர்ஆனை ஹிப்ழ் செய்ய முயற்சிக்க வேண்டும்.

நீண்ட சூராக்கள், நடுத்தரமான சூராக்கள், சிறிய சூராக்கள் என்று குர்ஆன் சூராக்களை வகைப்படுத்தியுள்ளனர். சிறிய சூராக்களுக்கு முஃபஸ்ஸல் என்று பெயர். அத்தியாயம் 49 (அல்ஹுஜுராத்)லிருந்து கடைசி வரை உள்ள அத்தியாயங்களே முஃபஸ்ஸல் அத்தியாயங்கள். எனவே, சிறிய அத்தியாயங்கள் முழுவதையும் நாம் மனனம் செய்து கொள்ளும் வைராக்கியத்தை மேற்கொள்ள வேண்டும். அல்லது குறைந்த பட்சம் கடைசி இரண்டு ஜுஸ்வுகளையாவது (29,30) மனப்பாடம் செய்தே தீர வேண்டும்.அண்ணலார் சொன்னது போல கொஞ்சமேனும் குர்ஆன் இல்லாத உள்ளம், பாழடைந்த வீட்டைப் போன்றதாகும். கொஞ்சமேனும் என்பது குறைந்த பட்சம் ஒரு ஜுஸ்வு, இரண்டு ஜுஸ்வுவாக இருக்கக்கூடாதா என்ன?
source: http://www.dhisaikaati.com/

No comments:

Post a Comment