Wednesday, September 11, 2013

தண்ணீரை வீண் விரயமாக்குவதைத் தடுக்க முடியும்!

உணவு இல்லாமல்கூட பல நாட்கள் மனிதனால் உயிர் வாழ முடியும். ஆனால், தண்ணீர் இல்லாமல் மனிதனால் ஓரிரு நாட்களுக்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாது. தமிழ் மக்களின் முன்னேற்றத்திற்கு தடையாய் இருப்பது என்ன என்று யோசித்தால், உடனடியாக நம் மனதில் தோன்றும் முதல் பிரச்சனை தமிழ்நாட்டின் தண்ணீர் பிரச்சனை. அது கொஞ்சம் கடினமாக தான் இருக்கிறது. தேவைக்கு குறைவாக கிடைக்கிறது. இதனால் அண்டை மாநிலங்களோடு சண்டை, சச்சரவு ஏற்படுகிறது.
இயற்கையின் கொடையான தண்ணீர் உயிரின் ஆதாரம். இயற்கையின் விதிப்படி தண்ணீர் என்பது எல்லா உயிரினங்களுக்கும் இந்த மண்ணுக்கும் உரித்தான பொதுச் சொத்து. தற்போது வாழும் மக்களுக்கு மட்டுமின்றி வரவிருக்கும் தலைமுறைக்கும் அதன் மீது உரிமை உண்டு. 
தண்ணீர் பற்றிய தகவலை நான் தேட ஆரம்பித்தது ஒரு கட்டாய சூழ்நிலையில் தான். ஏனென்றால் தற்பொழுது அதிரையில் தண்ணீர் தட்டுப்பாடு ஆங்காங்கே காண முடிகிறது, போர்வெல்களில் தண்ணீர் வரத்தில்லை, தண்ணீர் அடி மட்டம் கீழே இறங்கியுள்ளது ஆதலால் கம்பரசர் ஊதியே ஆக வேண்டுமென பலரும் இச்செயலில் செய்கின்றனர் காரணம் தண்ணீர் இல்லாமல் எந்தறொரு ஜீவனும் வாழ்வது கடினம். 
அன்று, கிணற்றினில் தண்ணீர் சாதரணமாக அள்ளலாம் அந்த அளவிற்கு தண்ணீர் நிறைந்து காணப்படும் மேலும் அள்ள அள்ள நீர் ஊறிக்கொண்டே இருக்கும் ஆனால் இன்று, கார்ப்பரேஷன் தண்ணீர் ஒருநாள் விட்டு ஒருநாள் நம் பகுதிகளுக்கு வருகிறது என்பது சிறு ஆறுதல் தரக்கூடிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளோம், வந்தோர்  தாகம் தணிக்க தண்ணீரும் இல்லை, சோகம் உரைக்க சொற்களும் இல்லை. 
வானிலை அறிஞர்கள் இந்த ஆண்டு பருவ மழை எதிர்பார்த்த அளவு பெய்யாது என்று சொல்லி வயிற்றில் புளி கரைத்திருக்கிறார்கள். தண்ணீர் ஒரு நாட்டின் ஜீவாதார பிரச்சனை, அதுதான் தனி மனிதனின் ஜீவாதார உரிமையும் கூட .வற்றாத ஜீவ நதிகளெல்லாம் வற்றும்வரை தண்ணீர் திருட்டு. வாழ வீடு கட்ட, வளம் கொழிக்கும் மணல் திருட்டு. வீட்டிலுள்ளோர், வெளியில் சென்று வந்தாலும், விருந்தினர் வந்து சேர்ந்தாலும் வந்தோரை வரவேற்று முதலில் உபசரிப்பது ஒரு குவளை தண்ணீர் கொடுத்து அந்நேரத்தில் தான் தண்ணீரின் முக்கியத்துவம் நமக்கு தெரிகிறது.
முந்தைய காலங்களில் (முன்னே என்றதும் பழங்காலத்துக்கு செல்ல வேண்டாம், 15-20 ஆண்டுகளுக்கு முன்னே ஆற்றங்கரை என்று அழைக்கப்படும் சி.எம்.பி லைன் வாய்க்காலில் தண்ணீர் வழிந்தோடும் ஆற்றில் சரியாக தூர்வாரப்படாமல் தெருக்களில் சிதறி பல நாட்களாக ஓடி பல குளங்கள் நிறையும் ஆனால் தற்போது அவ்வழியே துர்நாற்றம் வீசி தண்ணீர்க்கு பதில் சாக்கடை கால்வாய்களாக ஓடுகிறது என்பது வேதனையான விஷயம்,
இன்றைய தலைமுறை வற்றிய வாய்க்காலையும், ஆறையும், வானம் பார்த்த பூமியையும் வரலாற்றுச் சின்னங்களாய் பார்த்து வாய் பிளந்து நிற்கின்றனர். நாளைய தலைமுறைக்கு நாம் இவற்றையெல்லாம், நல்ல பல கதைகளாய், கவிதைகளாய், புவியியல் பாடத்தில் புள்ளிகளாய், கோடுகளாய் மட்டுமே சொல்ல இயலுமென்பதே இன்றைய நிலை. 
தமிழ்நாட்டில் விவசாயம் என்பதே இல்லாமல் போனாலும் ஆச்சர்யமில்லை . அரிசி ஆந்திராவில் இருந்து இறக்குமதி செய்யபடுகிறது, விலை உயர்வுக்கு காரணம் அதுதான். தமிழ்நாட்டில் தண்ணீர் இப்போது விற்பனை பொருள் , தண்ணீர் பாக்கெட் , தண்ணீர் பாட்டில் , தண்ணீர் கேன் என்று அது இப்போது பணம் பண்ணும் தொழில் என்றாகிவிட்டது. 
நம் பருவகாலத்தில் பலஞ்சூர், நசுனி, ராஜாமடம் போன்ற ஆறுகளிலும், செக்கடிக் குளம், செடியன் குளம், வெள்ளை குளம் மற்றும் ஆலடிக்  குளம் போன்ற குளங்களிலும் குளித்து அதன் கரையில் உள்ள மணலில் குதித்தோடி விளையாடி, மகிழ்ந்திருந்த காலம் மலையேறிப் போய்விட்டது. வற்றாத ஆறுகள் / குளங்கலெல்லாம், வசதி படைத்தோர், மணலை வாரிச்சுருட்டியப் பின் விட்டுச் சென்ற பள்ளங்கள் மட்டுமே, மனிதனின் உயிரைக்குடிக்க வாய் பிளந்து நிற்கின்றன வறண்டும் கிடக்கின்றன. 
நதிகள் ஒன்றாக இணந்தால் வெள்ள அபாயம் இருக்காது, நல்ல மழை பெய்த மாநில தண்ணீர் வறட்சி பாதித்த மாநிலத்திற்கு போய் சேரும் அந்த மாநில தண்ணீர் பிரச்சனையும் தீரும் , சமூக ஆர்வலர்கள் சுற்று சூழல் நிபுனர்கள் சமூக அமைப்புகள் நதிகள் இணைப்பை வலியுறுத்துகிறது , அது அவசர அவசியம் என்கிறார்கள் , ஆனால் எல்லா அரசும் ஆமாம் அவசியம் என்று சொல்லிவிட்டு அதற்கு எத்தனை ஆயிரம் கோடி செலவாகும் என்று சொல்லி ஒதுங்கி விடுவார்கள்.
ஆற்றுநீர் ஓடி, அளப்பரிய வளம் பெற்ற நாட்டினிலே, பாட்டில் நீரை வாங்கி பருக வேண்டிய கட்டாயம். நாம் பணத்தைக் கொடுத்து வாங்குவது, பாட்டில் நீரை  மட்டுமல்ல, புதைக்கப்பட்ட மனிதங்களின் மனசாட்சியையும்தான். 
பருவமழை பொய்த்தது என்பது நமது தண்ணீர் தாகத்திற்கு காரணம் அல்ல. பெய்த மழை நீரை நாம் தேக்கி வைத்து கொள்ள எந்த ஏற்பாடும் செய்து கொள்வதில்லை, இதனால் பெய்த மழை நீரின் முக்கால் பங்கு கடலில் கலந்து வீணாகிறது என்பதுதான் நிஜம். வீட்டில் மழை நீர் சேமிப்பின் அவசியத்தை அரசு சொன்னதே பத்து வருடங்களுக்கு முன்புதான். இப்போது கூட கண்மாய்கள், குளங்கள், ஏரிகள் சரிவர தூர் வாரபடுவதில்லை, இதனால்தான் தண்ணீர் பிரச்சனை. ஆனால் தூர் வாரியதாக பொய் கணக்கு எழுதமட்டும் தவறுவதில்லை, இதனால் கண்மாய்கள், குளங்கள், ஏரிகள் நிறைந்து வழிந்து கடலில் கலந்து விடுகிறது . இதுபற்றி எந்த அரசும் அக்கறைபட்டதும் இல்லை. கவலைபட்டதும் இல்லை.
அதிரையில் அதிகளவில் உப்பு விளைகிறது தண்ணீர் தேக்கமில்லாத காரணத்தால் அனைத்து தண்ணீரும் கடலோடு கலக்கின்றன, இந்தியாவின் இருபத்தைந்து சதவிகித மாவட்டங்களில் தண்ணீர் உப்பு அதிகமாகி விட்டது . அது மட்டுமல்ல நமது தண்ணீரில் இரும்பு தாது அதிகமாகி விட்டது என்கிறது நீர்வள அமைச்சகம். அதுமட்டுமல்ல ஈயம், குரோமியம் , காட்மியம் போன்ற கனிமங்களால் தண்ணீர் மாசுபட்டிருக்கிறது என்று தனது அறிக்கையில் நீர்வள அமைச்சகம் மிரட்டுகிறது, உலக அளவில் பார்க்கும் போது கூட இந்தியாவின் நீர்வளம் பெருமை பட்டு கொள்வது போல் இல்லை. மோசமான நிலைதான் , உலக மக்கள் தொகையில் இந்தியாவின் மக்கள் தொகை பதினாறு சதவிகிதம், ஆனால் இந்தியாவின் நீர்வளம் வெறும் நான்கு சதவிகிதம் தான் , நிலத்தடி நீர் ஏற்கனவே குறைந்துவிட்டது தற்போது மேற்பரப்பு நீரும் குறைந்து விட்டது என்கிறார்கள் நீர்வள நிபுனர்கள் .
இப்படியே போனால் என்ன ஆகும்? நினைத்து பார்க்கவே பயமாக இருக்கிறது. பொதுவாக, நிலத்தின் அடியில், நீர் அடுக்கு(water table)க்கு சற்று கீழே, சில நூறு அடிகளில் நிலத்தடி நீர் பொதிந்து கிடக்கிறது. இந்த நிலத்தடி நீரை அக்யூபர் (aquifer) என்று நீர்வள நிபுணர்கள் சொல்கிறார்கள். அதற்கு கீழே, ஒரு அடுக்குக்கு பிறகு, ஆழ்நிலை உப்புத் தண்ணீர் களம்(deep salty aquifer) உள்ளது. சில நூறு அடிகளில் இருக்கும் நிலத்தடி நீரை, நாம் முற்றிலுமாக இறைத்துவிட்டால், அந்த இடத்திற்கு ஆழ்நிலை உப்புத் தண்ணீர் வந்துவிடும் அபாயம் இருக்கிறது. இந்த தண்ணீர் கடல் நீர் போலத்தான். இதனை நமது அன்றாட வாழ்வுக்கு பயன்படுத்துவது மிகவும் கடினம்.
மக்களுக்கு பாதுகாக்கபட்ட சுகாதாரமான குடிநீர் வழங்காமல் இந்தியா வல்லரசு என்று சொல்லி கொள்வது பெருமையான விஷயம் அல்ல.

No comments:

Post a Comment