Sunday, August 11, 2013

புதுகையில் பலத்த மழை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டாக பருவமழை பெய்யத் தவறியதால் வரலாறு காணாத வறட்சி நிலவியது. நீர்நிலை அனைத்தும் வறண்டு விட்டதால் விவசாயம் அடியோடு ஸ்தம்பித்தது.

நிலத்தடி நீர்மட்டமும் குறைந்ததால் மாவட்டத்தின் பல பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவிவருகிறது. சம்பா சாகுபடிக்காக கல்லணைக் கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் டெல்டா பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் கடந்த இரண்டு நாட்களாக நிரம்பிவருகிறது. நிலத்தடி நீர்மட்டமும் அதிகரித்துள்ளதால் அப்பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நீங்கியுள்ளது.

மாவட்டத்தின் இதரப் பகுதிகளில் வறட்சி தாண்டவம் ஆடியதால் விவசாயிகள் மத்தியில் மழை குறித்து எதிர்பார்ப்பும், ஆதங்கமும் நிலவியது. நீண்ட இடைவெளிக்கு பின் நேற்று மதியம் முதல் மாலை வரை வெயில் மறைந்து மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை 5.30 மணிக்கு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

இரண்டுமணி நேரத்துக்கும் மேலாக இடைவிடாது பெய்த மழையால் புதுக்கோட்டை நகரின் முக்கிய வீதிகள் மற்றும் ரோடுகளில் மழை தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதுபோன்று தோரண வாய்க்கால்கள், கழிவுநீர் ஓடைகளில் மடைதிறந்த வெள்ளம் போல் மழை தண்ணீர் ஓடியது. இதனால் மாவட்டத்தில் கடந்த பல மாதங்களாக நீடித்த வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.

புதுக்கோட்டை மட்டுமின்றி மாவட்டத்தின் இதர பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. நிலத்தடி நீர் மட்டம் உயர்வதற்கும், சம்பா சாகுபடிக்கான உழவுப் பணிகளுக்கும் இந்த மழை பயனுள்ளதாக அமைந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

No comments:

Post a Comment