Wednesday, September 11, 2013

தண்ணீரை வீண் விரயமாக்குவதைத் தடுக்க முடியும்!

உணவு இல்லாமல்கூட பல நாட்கள் மனிதனால் உயிர் வாழ முடியும். ஆனால், தண்ணீர் இல்லாமல் மனிதனால் ஓரிரு நாட்களுக்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாது. தமிழ் மக்களின் முன்னேற்றத்திற்கு தடையாய் இருப்பது என்ன என்று யோசித்தால், உடனடியாக நம் மனதில் தோன்றும் முதல் பிரச்சனை தமிழ்நாட்டின் தண்ணீர் பிரச்சனை. அது கொஞ்சம் கடினமாக தான் இருக்கிறது. தேவைக்கு குறைவாக கிடைக்கிறது. இதனால் அண்டை மாநிலங்களோடு சண்டை, சச்சரவு ஏற்படுகிறது.
இயற்கையின் கொடையான தண்ணீர் உயிரின் ஆதாரம். இயற்கையின் விதிப்படி தண்ணீர் என்பது எல்லா உயிரினங்களுக்கும் இந்த மண்ணுக்கும் உரித்தான பொதுச் சொத்து. தற்போது வாழும் மக்களுக்கு மட்டுமின்றி வரவிருக்கும் தலைமுறைக்கும் அதன் மீது உரிமை உண்டு. 
தண்ணீர் பற்றிய தகவலை நான் தேட ஆரம்பித்தது ஒரு கட்டாய சூழ்நிலையில் தான். ஏனென்றால் தற்பொழுது அதிரையில் தண்ணீர் தட்டுப்பாடு ஆங்காங்கே காண முடிகிறது, போர்வெல்களில் தண்ணீர் வரத்தில்லை, தண்ணீர் அடி மட்டம் கீழே இறங்கியுள்ளது ஆதலால் கம்பரசர் ஊதியே ஆக வேண்டுமென பலரும் இச்செயலில் செய்கின்றனர் காரணம் தண்ணீர் இல்லாமல் எந்தறொரு ஜீவனும் வாழ்வது கடினம். 
அன்று, கிணற்றினில் தண்ணீர் சாதரணமாக அள்ளலாம் அந்த அளவிற்கு தண்ணீர் நிறைந்து காணப்படும் மேலும் அள்ள அள்ள நீர் ஊறிக்கொண்டே இருக்கும் ஆனால் இன்று, கார்ப்பரேஷன் தண்ணீர் ஒருநாள் விட்டு ஒருநாள் நம் பகுதிகளுக்கு வருகிறது என்பது சிறு ஆறுதல் தரக்கூடிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளோம், வந்தோர்  தாகம் தணிக்க தண்ணீரும் இல்லை, சோகம் உரைக்க சொற்களும் இல்லை. 
வானிலை அறிஞர்கள் இந்த ஆண்டு பருவ மழை எதிர்பார்த்த அளவு பெய்யாது என்று சொல்லி வயிற்றில் புளி கரைத்திருக்கிறார்கள். தண்ணீர் ஒரு நாட்டின் ஜீவாதார பிரச்சனை, அதுதான் தனி மனிதனின் ஜீவாதார உரிமையும் கூட .வற்றாத ஜீவ நதிகளெல்லாம் வற்றும்வரை தண்ணீர் திருட்டு. வாழ வீடு கட்ட, வளம் கொழிக்கும் மணல் திருட்டு. வீட்டிலுள்ளோர், வெளியில் சென்று வந்தாலும், விருந்தினர் வந்து சேர்ந்தாலும் வந்தோரை வரவேற்று முதலில் உபசரிப்பது ஒரு குவளை தண்ணீர் கொடுத்து அந்நேரத்தில் தான் தண்ணீரின் முக்கியத்துவம் நமக்கு தெரிகிறது.
முந்தைய காலங்களில் (முன்னே என்றதும் பழங்காலத்துக்கு செல்ல வேண்டாம், 15-20 ஆண்டுகளுக்கு முன்னே ஆற்றங்கரை என்று அழைக்கப்படும் சி.எம்.பி லைன் வாய்க்காலில் தண்ணீர் வழிந்தோடும் ஆற்றில் சரியாக தூர்வாரப்படாமல் தெருக்களில் சிதறி பல நாட்களாக ஓடி பல குளங்கள் நிறையும் ஆனால் தற்போது அவ்வழியே துர்நாற்றம் வீசி தண்ணீர்க்கு பதில் சாக்கடை கால்வாய்களாக ஓடுகிறது என்பது வேதனையான விஷயம்,
இன்றைய தலைமுறை வற்றிய வாய்க்காலையும், ஆறையும், வானம் பார்த்த பூமியையும் வரலாற்றுச் சின்னங்களாய் பார்த்து வாய் பிளந்து நிற்கின்றனர். நாளைய தலைமுறைக்கு நாம் இவற்றையெல்லாம், நல்ல பல கதைகளாய், கவிதைகளாய், புவியியல் பாடத்தில் புள்ளிகளாய், கோடுகளாய் மட்டுமே சொல்ல இயலுமென்பதே இன்றைய நிலை. 
தமிழ்நாட்டில் விவசாயம் என்பதே இல்லாமல் போனாலும் ஆச்சர்யமில்லை . அரிசி ஆந்திராவில் இருந்து இறக்குமதி செய்யபடுகிறது, விலை உயர்வுக்கு காரணம் அதுதான். தமிழ்நாட்டில் தண்ணீர் இப்போது விற்பனை பொருள் , தண்ணீர் பாக்கெட் , தண்ணீர் பாட்டில் , தண்ணீர் கேன் என்று அது இப்போது பணம் பண்ணும் தொழில் என்றாகிவிட்டது. 
நம் பருவகாலத்தில் பலஞ்சூர், நசுனி, ராஜாமடம் போன்ற ஆறுகளிலும், செக்கடிக் குளம், செடியன் குளம், வெள்ளை குளம் மற்றும் ஆலடிக்  குளம் போன்ற குளங்களிலும் குளித்து அதன் கரையில் உள்ள மணலில் குதித்தோடி விளையாடி, மகிழ்ந்திருந்த காலம் மலையேறிப் போய்விட்டது. வற்றாத ஆறுகள் / குளங்கலெல்லாம், வசதி படைத்தோர், மணலை வாரிச்சுருட்டியப் பின் விட்டுச் சென்ற பள்ளங்கள் மட்டுமே, மனிதனின் உயிரைக்குடிக்க வாய் பிளந்து நிற்கின்றன வறண்டும் கிடக்கின்றன. 
நதிகள் ஒன்றாக இணந்தால் வெள்ள அபாயம் இருக்காது, நல்ல மழை பெய்த மாநில தண்ணீர் வறட்சி பாதித்த மாநிலத்திற்கு போய் சேரும் அந்த மாநில தண்ணீர் பிரச்சனையும் தீரும் , சமூக ஆர்வலர்கள் சுற்று சூழல் நிபுனர்கள் சமூக அமைப்புகள் நதிகள் இணைப்பை வலியுறுத்துகிறது , அது அவசர அவசியம் என்கிறார்கள் , ஆனால் எல்லா அரசும் ஆமாம் அவசியம் என்று சொல்லிவிட்டு அதற்கு எத்தனை ஆயிரம் கோடி செலவாகும் என்று சொல்லி ஒதுங்கி விடுவார்கள்.
ஆற்றுநீர் ஓடி, அளப்பரிய வளம் பெற்ற நாட்டினிலே, பாட்டில் நீரை வாங்கி பருக வேண்டிய கட்டாயம். நாம் பணத்தைக் கொடுத்து வாங்குவது, பாட்டில் நீரை  மட்டுமல்ல, புதைக்கப்பட்ட மனிதங்களின் மனசாட்சியையும்தான். 
பருவமழை பொய்த்தது என்பது நமது தண்ணீர் தாகத்திற்கு காரணம் அல்ல. பெய்த மழை நீரை நாம் தேக்கி வைத்து கொள்ள எந்த ஏற்பாடும் செய்து கொள்வதில்லை, இதனால் பெய்த மழை நீரின் முக்கால் பங்கு கடலில் கலந்து வீணாகிறது என்பதுதான் நிஜம். வீட்டில் மழை நீர் சேமிப்பின் அவசியத்தை அரசு சொன்னதே பத்து வருடங்களுக்கு முன்புதான். இப்போது கூட கண்மாய்கள், குளங்கள், ஏரிகள் சரிவர தூர் வாரபடுவதில்லை, இதனால்தான் தண்ணீர் பிரச்சனை. ஆனால் தூர் வாரியதாக பொய் கணக்கு எழுதமட்டும் தவறுவதில்லை, இதனால் கண்மாய்கள், குளங்கள், ஏரிகள் நிறைந்து வழிந்து கடலில் கலந்து விடுகிறது . இதுபற்றி எந்த அரசும் அக்கறைபட்டதும் இல்லை. கவலைபட்டதும் இல்லை.
அதிரையில் அதிகளவில் உப்பு விளைகிறது தண்ணீர் தேக்கமில்லாத காரணத்தால் அனைத்து தண்ணீரும் கடலோடு கலக்கின்றன, இந்தியாவின் இருபத்தைந்து சதவிகித மாவட்டங்களில் தண்ணீர் உப்பு அதிகமாகி விட்டது . அது மட்டுமல்ல நமது தண்ணீரில் இரும்பு தாது அதிகமாகி விட்டது என்கிறது நீர்வள அமைச்சகம். அதுமட்டுமல்ல ஈயம், குரோமியம் , காட்மியம் போன்ற கனிமங்களால் தண்ணீர் மாசுபட்டிருக்கிறது என்று தனது அறிக்கையில் நீர்வள அமைச்சகம் மிரட்டுகிறது, உலக அளவில் பார்க்கும் போது கூட இந்தியாவின் நீர்வளம் பெருமை பட்டு கொள்வது போல் இல்லை. மோசமான நிலைதான் , உலக மக்கள் தொகையில் இந்தியாவின் மக்கள் தொகை பதினாறு சதவிகிதம், ஆனால் இந்தியாவின் நீர்வளம் வெறும் நான்கு சதவிகிதம் தான் , நிலத்தடி நீர் ஏற்கனவே குறைந்துவிட்டது தற்போது மேற்பரப்பு நீரும் குறைந்து விட்டது என்கிறார்கள் நீர்வள நிபுனர்கள் .
இப்படியே போனால் என்ன ஆகும்? நினைத்து பார்க்கவே பயமாக இருக்கிறது. பொதுவாக, நிலத்தின் அடியில், நீர் அடுக்கு(water table)க்கு சற்று கீழே, சில நூறு அடிகளில் நிலத்தடி நீர் பொதிந்து கிடக்கிறது. இந்த நிலத்தடி நீரை அக்யூபர் (aquifer) என்று நீர்வள நிபுணர்கள் சொல்கிறார்கள். அதற்கு கீழே, ஒரு அடுக்குக்கு பிறகு, ஆழ்நிலை உப்புத் தண்ணீர் களம்(deep salty aquifer) உள்ளது. சில நூறு அடிகளில் இருக்கும் நிலத்தடி நீரை, நாம் முற்றிலுமாக இறைத்துவிட்டால், அந்த இடத்திற்கு ஆழ்நிலை உப்புத் தண்ணீர் வந்துவிடும் அபாயம் இருக்கிறது. இந்த தண்ணீர் கடல் நீர் போலத்தான். இதனை நமது அன்றாட வாழ்வுக்கு பயன்படுத்துவது மிகவும் கடினம்.
மக்களுக்கு பாதுகாக்கபட்ட சுகாதாரமான குடிநீர் வழங்காமல் இந்தியா வல்லரசு என்று சொல்லி கொள்வது பெருமையான விஷயம் அல்ல.

Sunday, September 8, 2013

ஈரான் பெட்ரோல்.. அமெரிக்க மிரட்டலை இந்தியா நிராகரித்தால் ரூ.57,000 கோடியை மிச்சப்படுத்தலாம்!

ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்கா விதித்துள்ள தடையை மீறி அந்த நாட்டிடம் இருந்தே அதை இறக்குமதி செய்தால் ரூ. 57,000 கோடியை சேமிக்க முடியும் என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார்.
ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதாகக் கூறி அந்த நாட்டுடன் எந்த வர்த்தக நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது என்று அமெரிக்க நெருக்கடியால் ஐ.நாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதையடுத்து ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி வந்த நாடுகள் அதை வேறு நாடுகளிடம் இருந்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஆனால், ஈரானுக்கு டாலர்களை வழங்கக் கூடாது என்ற அமெரிக்காவின் உத்தரவால், கொல்கத்தாவில் உள்ள யூகோ வங்கி மூலமாக ஈரானுக்கு ரூபாயாகத் தந்து ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கப்பட்டு வருகிறது. இந்த ரூபாயை ஈரானால் சர்வதேச சந்தையில் பயன்படுத்த முடியாது. இதனால் இந்த ரூபாய்கு இணையான உணவுப் பொருட்கள், மருந்துகள், ரயில்வே என்ஜின்கள், ரயில் பெட்டிகளை இந்தியாவிடம் இருந்து ஈரான் இறக்குமதி செய்து வருகிறது.
இந்நிலையில் ரூபாயின் மதிப்பைக் காப்பாற்ற மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் ஒன்று இந்திய சந்தையில் டாலர்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாமல் பார்த்துக் கொள்வது. இந்த வகையில் டாலர்களை சேமிக்கவும், கச்சா எண்ணெய் இறக்குமதிக்கான செலவை மிச்சப்படுத்தவும் அமைச்சர் வீரப்ப மொய்லி ஒரு புதிய யோசனையை மத்திய அரசிடம் தெரிவித்துள்ளார்.
 ஈரானுக்கு டாலர்களுக்குப் பதிலாக ரூபாயைத் தந்தே கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்ய முடியும் என்பதால், அந்த நாட்டிடம் இருந்து இறக்குமதி செய்யப்படும் பெட்ரோலியப் பொருட்களின் அளவை அதிகரிக்கலாம் என்கிறார் மொய்லி.
இந்த ஆண்டில் இதுவரை ஈரானிடம் இருந்து இந்தியா 2 மில்லியன் டன் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்துள்ளது. இன்னும் நமக்குத் தேவைப்படும் எண்ணெய்யில் 11 மில்லியன் டன்னை ஈரானிடம் இருந்தே வாங்கினால் நமக்கு ரூ. 57,000 கோடி மிச்சமாகும் என்று வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஈரானிடம் இருந்து 13 மில்லியன் டன் கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்தது குறிப்பிடத்தக்கது. அதே அளவை இந்த ஆண்டும் ஈரானிடம் இருந்தே வாங்கினால், பணம் மிச்சமாகும். இது தொடர்பான நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் நிதியமைச்சர் ப.சிதம்பரத்திடம் மொய்லி நேரடியாகவே பேசியுள்ளார்.
ஆனால், அமெரிக்காவுக்கு பயந்து கொண்டு ஈரானுடன் தயங்கித் தயங்கி மிகச் சொற்பமான அளவிலேயே இந்தியா வர்த்தம் செய்து வருகிறது. இந் நிலையில் ஈரானுக்கு பெரும் லாபம் கிடைக்கும் வகையில் பெரிய அளவிலான வர்த்தகத்தில் இந்தியா இறங்கினால் அது அமெரிக்காவை பகைத்துக் கொண்டது போலாகிவிடும் என்பதால் மன்மோகன் சிங் தயங்குவதாகத் தெரிகிறது.
இந்நிலையில் முதலில் ஈரானுடனான தூதரக உறவை சீராக்க வேண்டிய வேலையும் மத்திய அரசுக்கு உள்ளது. இராக்கில் இருந்து கச்சா எண்ணெய்யை ஏற்றிக் கொண்டு தனது கடல் எல்லைப் பகுதியைக் கடந்து சென்ற இந்திய டேங்கர் கப்பலை சமீபத்தில் ஈரான் சிறை பிடித்தது. தனக்கு 6 மில்லியன் டாலர் வரை வரி செலுத்த வேண்டும் என்று ஈரான் கூறிவிட்டது.
அதே நேரத்தில் ஈரானுடன் நெருக்கமான வர்த்தக உறவு வைப்பது அமெரிக்கா-இந்தியா இடையிலான உறவில் சிக்கலை ஏற்படுத்தும். இதைச் செய்யாவிட்டால் பல ஆயிரம் கோடிகள் இந்தியாவுக்கு இழப்பு ஏற்படும்.
இதனால் மொய்லி சொல்வதைப் போல ஈரானில் இருந்து அதிக கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து டாலர்களை மிச்சப்படுத்தி ரூபாய் மதிப்பு மேலும் சரிவதைக் கட்டுப்படுத்தலாம் என்கிறார் ப.சிதம்பரம். மொய்லிக்கு முன்னதாகவே சிதம்பரம் இந்தக் கருத்தைத் தெரிவித்திருந்தார். ஆனால், ஐ.நா. பொருளாதாரத் தடைகள், அமெரிக்க உறவை கருத்தில் கொண்டே எந்த முடிவையும் எடுக்க வேண்டும் என்றும் சிதம்பரம் கூறியுள்ளார்.

Wednesday, September 4, 2013

மாணவர்கள் பெயரில் பிழை இருப்பின், திருத்தம் செய்து கொள்ள வாய்ப்பு!

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள், பெயரில் பிழை இருப்பின் திருத்தம் செய்துகொள்ள ஆக., 26 முதல் செப்.7 வரை வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள் பெயர் பட்டியல் இறுதி செய்யும் பணி, ஆக., 26 முதல் நடக்க உள்ளது. இதன்படி மதிப்பெண் சான்றிதழில், பெயர், இன்ஷியல் பிறந்த தேதி உள்ளிட்டவை பதிவு செய்யப்படும். இதுதொடர்பாக, தேர்வுத் துறையின் சுற்றறிக்கை:

சில பெற்றோர், குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் போது பெயர், இன்ஷியல், பிறந்த தேதி போன்ற விவரங்களை தவறாக கொடுக்கின்றனர். இதனால், 10ம் வகுப்பு பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழில் தவறு ஏற்படுகிறது. உயர் கல்விக்கு செல்லும் போது சிக்கல் ஏற்பட்டு அதை சரி செய்ய தாமதம் ஆகிறது. இதைத் தவிர்க்க மாணவரிடம், உறுதி மொழி சான்றிதழ்
படிவம் அளிக்கப்படும். அதில் பெயர், இன்ஷியல் உள்ளிட்ட சரியான விவரங்களை எழுத வேண்டும் படிவத்துடன் பிறப்பு, ஜாதிச் சான்றிதழ் நகல் இணைக்க வேண்டும். இப்படிவத்தை ஆக., 26 முதல் செப். 7க்குள் தலைமை ஆசிரியரிடம் பெற்று, பூர்த்தி செய்து ஒப்படைக்க வேண்டும்.